சென்னை: சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயம் செய்கின்றன. மார்ச் 8, 2024 அன்று, மகளிர் தினத்தையொட்டி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்தது.
கடந்த ஓராண்டில் வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்த போதிலும், வீட்டு சிலிண்டர்களின் விலை தொடர்ந்து இருந்தது. இந்நிலையில் வீட்டு சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியது. அதன்படி ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.550 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிலிண்டர் விலை உயர்வுக்கு செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘சிலிண்டர் விலை உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை உயர்த்தாதீர்கள் என்று கெஞ்சும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தேர்தலுக்காக காத்திருக்காமல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்,’ என்றார்.