திருமணமும் தீபாவளியும் போன்ற பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்வு, சரிவு மாறுபாட்டுடன் தொடர்கிறது. அதே சமயம் வெள்ளியின் விலையும் அதிகரித்து, நடுத்தர மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில், நிபுணர்கள் தங்கம், வெள்ளியைத் தாண்டியும் இன்னொரு உலோகத்திற்கான தேவை அதிகரிக்கப்போகிறது என்று கணித்து வருகிறார்கள். அதுவே உலகளவில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்யும் செம்பு ஆகும்.

இந்தோனேசியாவின் கிராஸ்பெர்க் சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டதால், உலகளவில் செம்பின் விநியோகத்தில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் செம்பின் விலை வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. 2027 வரை அந்த சுரங்கம் முந்தைய உற்பத்தி நிலைக்குத் திரும்பாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, செம்பின் விலை வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் பல உலகளாவிய நிதி நிறுவனங்கள், செம்பின் உற்பத்தி குறைவால் விலை பெரிதும் உயரும் என கணித்துள்ளன. டிசம்பர் 2025ல் ஒரு டன் செம்பின் விலை 10,500 அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம், செம்பின் நீண்டகால தேவை வலுவாக இருக்கும் எனவும், MCX சந்தையில் ஒரு கிலோ ரூ.1,080ஐ எட்டக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கார்பன் குறைப்பு, மின்சார வாகன உற்பத்தி மற்றும் சூரிய மின்சாரத் திட்டங்கள் செம்பின் பயன்பாட்டை பல மடங்கு உயர்த்துகின்றன. ஒரு மின்சார வாகனம், சாதாரண காரை விட 3 முதல் 4 மடங்கு அதிக செம்பைப் பயன்படுத்துகிறது. இதனால், 2025ல் 1.2 மில்லியன் டன்னாக இருந்த மின்சார வாகனங்களுக்கான செம்புத் தேவை, 2030ல் 2.2 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் கூட, “செம்பே புதிய தங்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.