புதுடெல்லி: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று (அக்.1) ரூ.48 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ரூ.1855-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.1903 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், உள்நாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதன்படி, நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை இன்று 48 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை உடனடியாக அமலுக்கு வருகிறது. புதிய விலையின்படி, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் புதுடெல்லியில் ரூ.1,740-க்கும், மும்பையில் ரூ.1,692-க்கும், சென்னையில் ரூ.1,903-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,850-க்கும் விற்கப்படுகிறது.
நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவு விலை உயர்ந்துள்ளது.