
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ந்தாலும், காகித ரூபாய் நோட்டுகள் இன்னும் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளன. சில நேரங்களில் நம்மிடம் வரும் நோட்டுகள் கிழிந்தோ, ஒட்டப்பட்டோ இருக்கலாம். பலர் இதை செலுத்த முடியாது என நினைத்து சிரமப்படுகின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றினால், இவை எளிதாக மாற்றப்படலாம்.
நோட்டுகள் இரண்டு துண்டுகளாக இருந்தாலும், எண் தெளிவாக இருந்தால் வங்கிகளில் மாற்றலாம். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இரண்டிலும் இந்த சேவை இலவசமாக கிடைக்கும். இதற்கான எந்தப் படிவமும் தேவையில்லை.

முக்கிய சின்னங்கள், காந்தி படம், வாட்டர் மார்க் போன்றவை சேதமடைந்தாலும், விதிமுறைகளுக்குள் இருந்தால் மாற்றம் சாத்தியம். ஆனால் தீயில் எரிந்தது அல்லது முற்றிலும் அழுக்கடைந்தது போன்றவற்றை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டுமே மாற்ற வேண்டும்.
வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட நோட்டுகள் ஏற்கப்படமாட்டாது. நேரம் குறைவாக இருந்தால், டிரிபிள் லாக் ரிசெப்டக்கிள் (TLR) முறையைக் கொண்டு ரிசர்வ் வங்கிக்கு நோட்டுகளை அனுப்பி மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு நாளில் ரூ.5,000 மதிப்புள்ள நோட்டுகளை இலவசமாக மாற்றலாம். அதற்கு மேல் மாற்றும்போது வங்கி சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைகள் மூலம், கிழிந்த நோட்டுகள் உங்களுக்கு இழப்பாகாமல் பாதுகாப்பாக புதிய நோட்டுகளாக கிடைக்கும்.