கடந்த மாத இறுதியில் தொடர்ச்சியாக 8 நாட்கள் குறைந்து வந்த தங்கம் விலை, ஜூலை மாத தொடக்கத்திலிருந்தே மீண்டும் உயர்நிலை நோக்கி செல்கிறது. உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பங்குசந்தை நிலவரம் ஆகியவை தங்கத்தின் மதிப்பை பெரிதும் பாதித்துள்ளன. கடந்த ஒரு வருடமாக உயர்ந்து வந்த தங்க விலை, சமீபத்தில் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரலாறு காணாத உயரத்தை எட்டியது.

ஜூன் மாத இறுதியில் விலை சற்று குறைந்திருந்தாலும், ஜூலை 1ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அந்த நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,020 ஆக இருந்தது; அதன்படி ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஜூலை 2ஆம் தேதி தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்த நிலையில், இன்று தங்கம் ரூ.9,065 ஆகவும், சவரன் ரூ.72,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கூடுதலாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், தற்போதைய விலை ரூ.7,480 ஆக உள்ளது. ஒரு சவரன் 18 காரட் தங்கம் ரூ.59,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த விலை நிலவரத்தினைப் பரிசீலித்து தங்களின் தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மாற்றமின்றி இருந்தது வெள்ளி விலை. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.120 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 என்றும் விலை நிலைத்திருக்கிறது. தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ள நிலையில், எதிர்காலம் பற்றிய நிபுணர்களின் கணிப்புகள், எதிர்வரும் நாட்களில் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன.