சென்னை: தமிழ்நாடு மின் ஆலோசகர்கள் சங்கம் மற்றும் ஸ்மார்ட் எக்ஸ்போஸ் இணைந்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் “எலக்ஸ்போ” என்ற மாபெரும் மின் மற்றும் மின்னணு கண்காட்சியை நேற்று முதல் நடத்துகின்றன. நாளை வரை கண்காட்சி தொடரும்.
தமிழ்நாடு மின் ஆலோசகர்கள் சங்கத் தலைவர் பாலமுருகன் கூறுகையில், “”ஒரே நேரத்தில் 100 நிறுவனங்களுக்குச் சென்று அவற்றின் தயாரிப்புகளை முழுமையாகப் பார்க்க முடியாது. ஆனால், இந்தக் கண்காட்சியின் மூலம் பொதுமக்கள், தொழிலாளர்கள் ஒவ்வொரு பொருளையும் விரிவாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.
இக்கண்காட்சியில், சீமென்ஸ், எல்&கே, கிரீவ்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட, 101 நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு வகையான எலக்ட்ரிக்கல் பொருட்களில் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இதில், டிரான்ஸ்பார்மர்கள், கண்ட்ரோல் பேனல்கள், கேபிள்கள், வயர்கள் என அனைத்து வகையான மின்சாதன பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியின் மூலம் பொதுமக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை நேரடியாக ஆர்டர் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இக்கண்காட்சியின் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற சோமேக்ஸ் 2024 கண்காட்சியில் பார்சல்களை ஏற்றி இறக்குவதற்கான கன்வேயர் இயந்திரம் போன்ற பல்வேறு உபகரணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.