சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை யூபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கலாம். இதுவரை நெட் பேங்கிங் வழியே பல மாதங்களாக காத்திருத்தலே வழக்கம். ஆனால் புதிய திட்டத்தால் உடனடியாக பணம் பெறும் வசதி கிடைக்கிறது. இது தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கக்கூடியது.

அதேசமயம், தவறான காரணங்களுக்காக பிஎஃப் பணத்தை எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிஎஃப் தொகையை வீடு கட்டுதல், கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான பயன்பாடு கண்டறியப்பட்டால், எடுக்கப்பட்ட தொகை திரும்பப்பெறப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.
பணியாளர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் பிஎஃப் தொகையை முழுமையாக எடுக்கலாம். ஒன்று – ஓய்வு பெறும் வயதை அடைந்த பிறகு. இரண்டு – இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இன்றி இருந்தால். இதைத் தவிர வேறு தேவைக்காக பணத்தை முழுவதும் எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது. மூன்று ஆண்டுகளுக்கு பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது என்பதும் புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “உங்கள் பிஎஃப் பணம் உங்கள் வாழ்நாள் பாதுகாப்பு கவசம். தவறான காரணங்களுக்காக எடுக்க வேண்டாம். 1952-ஆம் ஆண்டு பிஎஃப் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்” என்று அறிவித்துள்ளது. எனவே ஊழியர்கள் தங்கள் பிஎஃப் தொகையை உண்மையான தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.