2024–25 நிதியாண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) வட்டி விகிதத்தை 8.25% என ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையம் (EPFO) அறிவித்துள்ளது. இந்த உயர்வுக்கு பிறகு பல பிஎஃப் சந்தாதாரர்கள், அந்த வட்டியொட்டும் தொகை தங்களது கணக்கில் வரவாகியதா என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக வட்டி வரவு பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாவதாக இல்லாத போதும், சில சந்தாதாரர்கள் தங்களது கணக்குகளில் வட்டி சேர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், PF இருப்பை சரிபார்ப்பதற்கான நான்கு எளிய முறைகளை EPFO வழங்கியுள்ளது. முதலாவது, அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in மூலமாக உள்நுழைந்து, உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளீட்டு, “e-Passbook” என்பதைத் தேர்வு செய்தால் PF இருப்பு அறியலாம். இரண்டாவது, உமாங் ஆப்பைத் (UMANG App) பயன்படுத்தி, EPFO – View Passbook தேர்வு செய்து OTP மூலம் உள்நுழைந்து உங்கள் கணக்குத் தகவல்களை பெறலாம்.
மேலும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து EPFOHO UAN என டைப் செய்து 7738299899 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாலும் உங்கள் பிஎஃப் இருப்பை அறியலாம். தகவலை தமிழில் பெற விரும்பினால், “EPFOHO UAN TAM” என அனுப்பலாம். இதேபோல, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், உங்களது PF இருப்பு விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
இந்த வசதிகள் அனைத்தும் PF வட்டி நிலவரத்தையும், எப்போது என்ன தொகை சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்தும். வீட்டிலிருந்தபடியே EPF கணக்கை கண்காணிக்க விரும்பும் அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.