ஒரு காலத்தில் நம்பகத்தன்மை, அனுபவம், தலைமைத்திறன் என பல காரணங்களால் பெரிதும் மதிக்கப்பட்ட 40 வயது ஊழியர்கள், இன்று பணிநீக்கத்தின் முக்கிய இலக்காக மாறி வருகின்றனர். பணிநீக்கம் அல்லது நிறுவன மறுசீரமைப்புகள் நேரமெல்லாம், இந்த வயதிலானவர்களே பெரும்பாலான முறையில் நீக்கப்படுகின்றனர்.

இந்த வயதினருக்கு அதிக நிதிச் சுமை ஏற்பட்டிருப்பதும், அதே நேரத்தில் சேமிப்பு குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளதைக் கவனிக்க வேண்டியுள்ளது. வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்விச்செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 40 வயதுக்குட்பட்டோர், திடீர் வேலை இழப்பால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர் என்று பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே தெரிவித்தார்.
முந்தைய காலங்களில் அனுபவம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆனால் இப்போது நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில், அதிக சம்பளம் பெறும் 40 வயது ஊழியர்களை முதலில் பணிநீக்கம் செய்கிறார்கள். இளைய ஊழியர்கள், குறைந்த ஊதியம், அதிக உழைப்பு, தொழில்நுட்பங்களிலான விரைவான பயிற்சி ஆகிய காரணங்களால் முன்னுரிமை பெறுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், 40 வயதிலுள்ளவர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க, தேஷ்பாண்டே சில முக்கியமான ஆலோசனைகளை வழங்குகிறார். முதலாவது, செயற்கை நுண்ணறிவில் திறமை பெறுவது இன்று அவசியமானது. இரண்டாவது, தேவையற்ற செலவுகளை குறைத்து மிதமான நிதி சேமிப்பை உருவாக்க வேண்டும். மூன்றாவது, தொழில்முனைவோராக சிந்திக்கத் தொடங்கி, ஃப்ரீலான்ஸ் அல்லது ஆலோசனை வேலைகள் மூலம் கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
நடப்பு சூழலில், 40 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் தங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் திறனை வளர்த்துக்கொண்டால்தான் எதிர்காலத்தை நிச்சயமாக்க முடியும்.