இந்தியாவில் தங்கம் எப்போதும் முக்கியமான முதலீடாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பண்டிகைகள் மற்றும் திருமண காலங்களில் பலர் ரொக்கமாக கொடுத்து தங்க நகைகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இதனால் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, அரசு தங்கம் வாங்குவதற்கான நெறிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. தற்போது, ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு வரை ரொக்கமாக கொடுத்து தங்கம் வாங்க அனுமதி உள்ளது. அதற்கும் மேலான பரிமாற்றங்களை பேங்க் டிரான்ஸ்ஃபர், செக், NEFT அல்லது RTGS மூலமாக மட்டுமே செய்ய முடியும்.

தங்கம் வாங்கும் போது, 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான தங்க நகைகளை வாங்க விரும்பினால், PAN கார்டு விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கணக்கில் வராத சொத்து மற்றும் கருப்பு பண புழக்கத்தை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட நடவடிக்கையாகும். நகைக்கடைக்காரர், வாடிக்கையாளரின் PAN விவரங்களை சேகரித்து, அதை வருமான வரித்துறைக்கு அனுப்பி வைப்பார். இதன்மூலம் தங்கம் சம்பந்தப்பட்ட பணப்பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது.
மேலும், சில விற்பனையாளர்கள் அடையாளத்திற்காக ஆதார் விவரங்களையும் கேட்கலாம். ஆனால் இது சட்டபூர்வமான கட்டாயம் அல்ல. ஆதார் நம்பர் சமர்ப்பிப்பது கடை மற்றும் பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும். ஆனால் PAN கார்டு கொடுக்க தவறினால், அந்த பரிமாற்றம் செல்லாது எனக் கருதப்படும். எனவே தங்கம் வாங்கும் போது சரியான அடையாள ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்.
இந்த நெறிமுறைகள் பண மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசின் முயற்சியாகும். இதன் மூலம் தங்க சந்தை மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டதாக மாறி, நிதி வெளிப்படைத்தன்மை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் தங்கம் வாங்கும் புதிய விதிமுறைகள் பொதுமக்கள் அனைவருக்கும் புரிந்துகொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் மிக முக்கியமானவை ஆகும்.