துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மற்ற நாடுகள் தவறாகப் பயன்படுத்தி, தங்கள் வெள்ளி பொருட்கள், பிளாட்டினம் கலவை மற்றும் உலர் பேரிச்சம் பழங்களை ஐக்கிய அரபு அமீரகம் மூலம் இந்தியாவுக்குள் கொண்டு வந்து பெரும் லாபம் ஈட்டுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தடையில்லா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் மூலம் இந்தியாவுக்கு அதிக அளவில் வெள்ளிப் பொருட்கள், பிளாட்டினம் அலாய் மற்றும் உலர் பேரிச்சம் பழங்களை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
இது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் கவனத்துக்கு இந்தியா இந்தப் பிரச்னையைக் கொண்டு வந்தது.
இதைத் தொடர்ந்து, அதிக அளவில் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வது குறித்து விசாரணை நடத்தப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் உறுதி செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் தரப்பின்படி, சில விதிகளின் கீழ் ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறதா மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகள் மீறப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை தவறாகப் பயன்படுத்தி, ஐக்கிய அரபு அமீரகம் மூலம் வேறு சில நாடுகள் இந்தியாவுக்குள் தங்கள் பொருட்களை அனுப்புகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ.7.02 லட்சம் கோடி மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் 3வது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 1 மே 2022 முதல் நடைமுறைக்கு வந்தது.