தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக விலை குறையும் என எதிர்பார்த்தவர்கள் இந்த விலை உயர்வால் ஏமாற்றமடைந்துள்ளனர். சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையால் தங்கம் மீண்டும் முதலீட்டு மையமாக மாறியுள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.8,990 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.71,920 என விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோயம்புத்தூர், நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் இதே விலை நிலவி வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருமண பருவம் தொடங்கவிருக்கும் இந்த கட்டத்தில் தங்கத்தின் விலை உயர்வது, பல நடுத்தர வர்க்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம் ரூ.8,940 மற்றும் ஒரு சவரன் ரூ.71,520 என்ற விலையில் இருந்தது. தற்போது அது மீண்டும் உயர்வை சந்திக்கிறது.
இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதிக அளவில் வாங்க தொடங்கியதைக் குறிப்பிடலாம். குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் உலோகங்களில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
முக்கியமாக அமெரிக்காவில் அதிகரித்து வரும் பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் அதன் பொருளாதார பாதிப்புகள் காரணமாக, பங்குச் சந்தைகள் போன்ற ஆபத்தான சொத்துகளில் முதலீடு செய்யும் திட்டங்களை முதலீட்டாளர்கள் ஒத்திவைத்து வருகின்றனர். இதனால், தங்கம் மீண்டும் முக்கிய முதலீட்டு ஆப்ஷனாக மாறியுள்ளது.
சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, எதிர்காலத்தில் நிலையான பொருளாதார சூழ்நிலை அமையாத வரை, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளதாகும். இது, முதலீட்டாளர்களின் திசையை மாற்றும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வது, முதலீட்டாளர்களுக்கு ஒரு நன்மையாக இருந்தாலும், பொதுமக்கள், குறிப்பாக திருமணத்திற்காக நகைகள் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு சவாலாக மாறியுள்ளது. குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு நழுவி விட்டதால், அடுத்த சில நாட்களில் விலை மீண்டும் குறையுமா எனக் காத்திருக்கின்றனர்.