பூட்டான் ஒரு அழகிய, சிறிய நாடு. கொரோனா தொற்று காலத்துக்குப் பிறகு சுற்றுலாவை ஊக்குவிப்பதே அந்நாட்டு அரசு முக்கிய நோக்கமாக வைத்துள்ளது. அதன்படி, இந்திய சுற்றுலாப் பயணிகளை குறிப்பாக ஈர்க்கும் வகையில், வரி இல்லாமல் தங்கம் வாங்கும் சலுகையை பூட்டான் அறிவித்துள்ளது. இது துபாய், கத்தார், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கிடைக்கும் மலிவு தங்க வசதியுடன் போட்டியாகும்.

வரி இல்லாத தங்கம் பூட்டானில் இரண்டு முக்கிய நகரங்களில் கிடைக்கும்: தலைநகர் திம்பு மற்றும் இந்திய எல்லை அருகே உள்ள ஃபுவென்ட்ஷோலிங். இவை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் நடத்தும் ‘Bhutan Duty-Free Limited’ கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும்.
சலுகையை பெற சில நிபந்தனைகள் உள்ளன. முதலில், சுற்றுலாப் பயணிகள் ‘நிலையான மேம்பாட்டுக் கட்டணம்’ (SDF) செலுத்தி டிக்கெட் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது, அவர்கள் பூட்டான் சுற்றுலாத் துறையால் சான்றளிக்கப்பட்ட ஹோட்டலில் குறைந்தது ஒரு இரவுக்கு தங்க வேண்டும்; எல்லையில் வந்து அதே நாளில் திரும்புபவர்கள் இதற்குரிய சலுகையை பெற முடியாது.
வரி இல்லாத தங்கத்தை வாங்க, இந்திய ரூபாய் அல்லது பூட்டான் நாணயம் பயன்படுத்த முடியாது. பணம் அமெரிக்க டாலர் (USD) மூலம் செலுத்த வேண்டும், மேலும் ஒருவர் அதிகபட்சம் 20 கிராம் தங்கம் மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுகிறார். இந்தியாவுக்கு திரும்பும்போது நாட்டின் சுங்க விதிகளை பின்பற்ற வேண்டும்.