
உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் போர் பதற்றம் போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்தனர். இதன் விளைவாக, தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை சர்வதேச அளவில் உயர்ந்தது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமானிய மக்களுக்கு நகை வாங்குவது கனவாகவே மாறிவிட்டது. குறிப்பாக கடந்த மாதங்களாக சவரன் விலை ஏறக்குறைய ரூ.75 ஆயிரத்தைத் தாண்டியது. எனவே நகை விற்பனை குறைந்து, வணிகர்கள் சலனமடைந்தனர்.

மே மாதம் தொடக்கம் முதல் விலை சற்று குறைய தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் ரூ.70,000க்கும் கீழ் விற்பனை ஆனதைத் தொடர்ந்து நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக மே 15 அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8610 மற்றும் ஒரு சவரன் ரூ.68,660 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று மே 16 தேதி, ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.8720 ஆகவும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.69,760 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.7150 ஆகவும், ஒரு சவரன் ரூ.57,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நகை வாங்க திட்டமிட்ட மக்களுக்கு இப்போது சற்றே சிரமத்தை உருவாக்கியுள்ளது.
மாறாக, வெள்ளியின் விலை எந்தவிதமான மாற்றமும் இன்றி நிலைத்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையின் இந்த ஏற்ற இறக்கம் உலக சந்தையின் நிலைமைக்கு ஏற்ப தொடரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே, முதலீடு செய்ய விரும்புவோர் விலை நிலவரத்தை கவனித்து முடிவு செய்ய வேண்டும்.