உலகளவில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. ரஷ்யா–உக்ரைன், இஸ்ரேல்–ஹமாஸ் போர், அதனுடன் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு போன்ற சூழல்கள் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் தங்கம் பாதுகாப்பான முதலீடு என்ற நிலை மேலும் வலுப்பெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆபரணம் மட்டுமல்லாது, சேமிப்பின் அடையாளமாகவும் தங்கம் கருதப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் மாதம் தொடங்கியவுடன் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,000-ஐ தாண்டி வரலாறு காணாத உயரத்தை எட்டியது. இது நகை விரும்பிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், செப்டம்பர் 8 ஆம் தேதி தங்க விலையில் சற்று குறைவு ஏற்பட்டது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,970 ஆகவும், ஒரு சவரன் ரூ.79,760 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.8,255-க்கும், சவரனுக்கு ரூ.66,040-க்கும் குறைந்துள்ளது. வெள்ளி விலையும் சிறிதளவு சரிவு கண்டுள்ளது.
இந்நிலையில், தங்க விலை குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை ஆர்வலர்கள் இதையே சரியான நேரமாகக் கருதுகின்றனர். உலகளாவிய பொருளாதார நிலைமை தொடர்ந்து அலைபாயும் சூழலில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான இடமாகவே இருந்து வருகிறது. எதிர்காலத்திலும் விலை மாற்றங்கள் நிகழக்கூடியதால் வாங்கும் நேரத்தில் அதிக கவனம் தேவைப்படுகிறது.