சென்னை: உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அமெரிக்க வரி விதிப்புகள் மற்றும் சர்வதேச போர் சூழ்நிலைகள் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவில் தங்க விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவருகிறது.
ஆபரணம் மற்றும் ஆடம்பரத்தைத் தாண்டி சேமிப்பின் முக்கிய மூலமாக தங்கம் கருதப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் தங்க விலை ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையாகவும், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையாகவும் மாறியுள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.9,725 என்றும், சவரனுக்கு ரூ.77,800 என்றும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று (செப்டம்பர் 3) விலை மீண்டும் திடீரென உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,805 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.8,115 என்றும், சவரனுக்கு ரூ.64,920 என்றும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.137க்கும், ஒரு கிலோ ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டுவதால், நகை சந்தை விற்பனைக்கும், முதலீட்டாளர்களின் திட்டங்களுக்கும் பெரிய தாக்கம் ஏற்படுகிறது.