சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று மட்டுமே ஒரு சவரன் தங்கம் ரூ.280 உயர்ந்து ரூ.75,120க்கு விற்பனையானது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.75,240ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.15 அதிகரித்து ரூ.9,405க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களாக குறைந்து வந்த தங்க விலை, சுபமுகூர்த்த தினங்கள் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.800 உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவு சரிவு கண்ட தங்கம், தற்போது மீண்டும் விலை உயர்வை நோக்கி செல்கிறது.
கடந்த ஐந்து நாட்களில் தங்க விலை நிலவரம் பார்க்கும்போது, ஆகஸ்ட் 24 அன்று பவுனுக்கு ரூ.74,520 இருந்த விலை, ஆகஸ்ட் 25 அன்று ரூ.74,440 ஆக குறைந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 26 அன்று ரூ.74,840 ஆனது. ஆகஸ்ட் 27 அன்று ரூ.75,120 என்ற உயர்வை எட்டிய நிலையில், இன்று ஆகஸ்ட் 28 அன்று ரூ.75,240 என்ற புதிய உயர்வை எட்டியுள்ளது.
இந்த விலை நிலவரங்கள் பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகளை பெரிதும் பாதித்துள்ளன. திருமணம் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் தங்கம் வாங்கும் மக்களுக்கு இந்த உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது. அதேசமயம், எதிர்காலத்தில் தங்க விலை மேலும் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்ற கேள்வி சந்தை வட்டாரங்களில் எழுந்துள்ளது.