சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து இன்று (செப் 26) சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இதனால், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.84,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலை குறைந்த நிலையில் இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது.

நேற்று (செப் 25) மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து, சவரனுக்கு ரூ.720 சரிந்தது. இதனால், அன்றைய விலை சவரனுக்கு ரூ.84,080 ஆக இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.1,040 சரிவை சந்தித்த தங்கம், இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வது, உலக சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் ஆகியவை விலை மாற்றத்துக்கு காரணமாக உள்ளன. இதன் தாக்கம் நேரடியாக இந்திய சந்தையிலும் தெரிகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து இன்று 10,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதலீட்டாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் இந்த மாற்றத்தைக் கவனித்து வருகின்றனர். திருவிழா காலம் நெருங்கி வருவதால், விலை மேலும் ஏற்றம் காணுமா என பொதுமக்களும் வியாபாரிகளும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தங்கம் விலை நிலவரம் அடுத்த சில நாட்களில் எப்படி மாறுகிறது என்பதே கவனிக்கத்தக்கதாக உள்ளது.