சென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.76,960க்கு விற்பனை ஆகி வருகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, 9,620 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு நகை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 28 அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,405க்கும், சவரன் ரூ.75,240க்கும் விற்பனையானது. ஆனால், அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 29 அன்று, தங்கம் விலை வேகமாக உயர்ந்து, கிராமுக்கு ரூ.9,470, சவரனுக்கு ரூ.75,760 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, கிராமுக்கு ரூ.9,535வும், சவரனுக்கு ரூ.76,280வும் விற்கப்பட்டது. ஒரு நாளிலேயே சவரனுக்கு ரூ.1,040 உயர்வு ஏற்பட்டதால், நகை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தங்கம் வாங்க நினைத்தவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்க விலை சவரனுக்கு ரூ.1,720 உயர்ந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 30) ஏற்பட்ட உயர்வு, வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்திருப்பதை காட்டுகிறது. எதிர்வரும் நாட்களில் விலை மேலும் உயரும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரித்து வருகின்றனர்.