சர்வதேச சூழல் உள்ளிட்ட காரணங்களினால் கடந்த ஆண்டு தங்கத்தின் விலை போக்கு ஏறுமுகத்தில் இருந்தது. இடையே உச்சம் தொட்ட நிலையில், இந்த ஆண்டும் தங்கத்தின் ஏறுமுகம் தொடர்கிறது. கடந்த ஆண்டு தங்கம் 27 சதவீத பலன் அளித்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த போக்கின் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் 7 சதவீதம் மாதாந்திர அடிப்படையில் உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை உயர்வு மக்களை கவலைக்குள்ளாக்கினாலும், முதலீடு நோக்கில் தங்கம் ஈர்க்கிறது. இந்த பின்னணியில் தங்கம் தொடர்பாக முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை முக்கியத்துவம் பெறுகிறது.
பொதுவாக, தங்கம் பணவீக்கம், சர்வதேச நெருக்கடி உள்ளிட்ட இடர்களுக்கு எதிரான பாதுகாப்பாக கருதப்படுகிறது. தற்போது பொருளாதார மற்றும் சர்வதேச புவிசார் அரசியலின் நிச்சயமற்றத்தன்மை தங்கத்தின் விலை உயர்விற்கு காரணமாக கருதப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு பொருளாதாரத்திற்கு ஆதரவாக மேற்கொண்டு வரும் அதிரடியான கொள்கைகளும் இதற்கு வலு சேர்க்கின்றன. அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு கொள்கையை அடுத்து, மற்ற நாடுகளும் இறக்குமதி வரி போரில் ஈடுபட்டால், பணவீக்கத்தின் மீது தாக்கம் செலுத்தும்.
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. அமெரிக்க வட்டி விகித சுழற்சி துவங்கியவுடன், தங்கம் நல்ல பலன் அளிப்பதாக கடந்த கால புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன. மேலும், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. சர்வதேச தங்க இ.டி.எப்., நிதிகளிலும் முதலீடு அதிகரித்து வருகிறது.
இந்த பின்னணியில் தங்கம் தொடர்பான முதலீடு அணுகுமுறை முக்கியமாகிறது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு தொகுப்பில் தங்கத்தின் ஒதுக்கீடு பத்து முதல் பதினைந்து சதவீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனர். தங்கம் வாங்குவதை பொறுத்தவரை, விலை சற்று குறையும் தருணங்களில் வாங்கி சேர்ப்பது ஏற்ற உத்தியாக அமையும் என்கின்றனர்.
சிறிய அளவில் படிப்படியாக வாங்குவதும் நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும் என கருதப்படுகிறது. தங்கம் முதலீடு தொகுப்பில் விரிவாக்கத்திற்கு வலு சேர்ப்பதாகவும் கருதப்படுகிறது. முதலீடு தொகுப்பில் 20 சதவீதத்திற்கு மேல் தங்கம் இருப்பது ஏற்றதல்ல என்றும் கருதப்படுகிறது.
தங்கம் வாங்கும் வழிகளை பொறுத்தவரை, தங்க நிதிகள் அல்லது தங்க இ.டி.எப்., வடிவில் முதலீடு செய்வது ஏற்றதாக கருதப்படுகிறது. தங்க சேமிப்பு பத்திரங்களும் சிறந்த வழியாக அமைந்தன. எனினும், தங்க பத்திரங்கள் புதிதாக வெளியிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் நிலை சந்தையில் தங்க பத்திரங்களை வாங்குவதை பரிசீலிப்பதும் ஏற்றதாக இருக்கும்.
தங்கம் போலவே, மற்றொரு மதிப்பு மிக்க உலோகமான வெள்ளியும் கடந்த ஆண்டு நல்ல பலனை அளித்துள்ளது. தொழிற்சாலை பயன்பாட்டிற்கான வெள்ளியின் தேவை அதிகரித்து வருவது விலை உயர்வுக்கான காரணங்களில் ஒன்றாக அமைகிறது.