சென்னை: கடந்த 2 நாட்களாக விலை குறைந்து கொண்டே வருகிறது ஆபரணத்தங்கம். இதனால் மக்கள் மத்தியில் உற்சாகம் எழுந்துள்ளது.
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
கடந்த 7-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து, 9-ந்தேதி ரூ.81 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த நிலையில் மீண்டும் விலை எகிறியது. நேற்று முன் தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 280-க்கும், ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 240-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் தொட்டது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,270க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ,81,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று உச்சத்தை எட்டி இருந்தநிலையில், நேற்று கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ. 142-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ. 141-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.