புதுடில்லியில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி அமைப்பு இனி இரண்டு அடுக்குகளாக சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பால், பனீர், பீஸா, பிரட், மருத்துவக் காப்பீடு, தனிநபர் காப்பீடு போன்றவை ஜிஎஸ்டி விலக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய மாற்றங்களை வரவேற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, “இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசு” வழங்கியதாக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். நுகர்வோர் சார்ந்த வளர்ச்சிக்கு இந்த சீர்திருத்தம் பெரும் ஊக்கமாக அமையும் என்றும், பொருளாதார வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கங்களை எட்டும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், ரிலையன்ஸ் ரீடெய்ல் தலைவர் இஷா அம்பானி தனது அறிக்கையில், இந்த ஜிஎஸ்டி மாற்றங்கள் வீட்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்றும், வணிகத்துறைக்கு இணக்கத்தை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டார். வரி சீர்திருத்தம் நுகர்வோர் மற்றும் வணிகத்துறைக்கு இருமடங்கு பயன் தரக்கூடிய சூழலை உருவாக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, வணிகத்தை எளிதாக்கி, நுகர்வோரின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில், இந்த சீர்திருத்தங்களின் முழுப் பலன்களும் வாடிக்கையாளர்களிடம் தாமதமின்றி சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றம் மேலும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.