ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எட்டாவது ஆண்டில், சிறு வணிக நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகள் தீவிரமாகும் போது, நாடு முழுவதும் அதற்கெதிரான எதிர்வினைகள் உருவாகி வருகின்றன. இதில், எஸ்பிஐ வங்கியின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை முக்கியமான எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ள அந்த அறிக்கையில், சிறு வணிகர்கள் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் செய்த வர்த்தகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், சிறு வணிகர்கள் மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாறும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக எஸ்பிஐ எச்சரிக்கிறது. இதுவே, கடந்த ஆண்டு வரைக்கும் முன்னேறிய டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சிக்கு பின்னடைவாக அமையும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரில் மட்டும் 90% சிறு கடைகள் யுபிஐ சேவையை நிறுத்தியுள்ளன. தேநீர் கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை “யுபிஐ இல்லை” என அறிவிப்பு பலகைகள் வைக்கத் தொடங்கியுள்ளன. வணிக வரித்துறை ரூ.20 லட்சம் (சேவைகள்) அல்லது ரூ.40 லட்சம் (சரக்குகள்) வருமானத்தை தாண்டும் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயம் என எச்சரிக்கின்றது. இதற்கு யுபிஐ பரிவர்த்தனை பதிவுகள் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
என்றாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வேண்டிய காலகட்டத்தில், வரியைத் தவிர்க்கும் ஆபத்தை உருவாக்கும் இந்த அணுகுமுறை சமநிலையற்றது என்று விமர்சனங்கள் எழுகின்றன. வருமானத்தை அடையாளம் காண்பது நல்லது என்றாலும், அதற்காக சிறு வணிகர்களை திடீர் நோட்டீசுகளால் பயமுறுத்துவது நீண்ட காலத்தில் பொருளாதார ஒழுங்குகளை பாதிக்கக்கூடும்.