மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. நான்கு அடுக்கு வரி முறைக்கு பதிலாக இரண்டு அடுக்குகள் (5% மற்றும் 18%) மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள், மருத்துவக் காப்பீடு, சிறு நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு குறைந்த அளவு அல்லது பூஜ்ஜிய ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வந்துள்ளதால், நுகர்வோருக்கு இது “பெரும் பரிசு” என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பண்டிகைக் காலத்தில் வாங்கும் திறன் அதிகரித்து, தேவை கூடும் என்பதில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

கடந்த மாதம் அமெரிக்கா விதித்த வரி காரணமாக ஏற்றுமதி குறையும் அபாயம் உருவான நிலையில், உள்நாட்டு நுகர்வை ஊக்குவிப்பதன் மூலம் அந்த பாதிப்பை சமப்படுத்தும் சக்தி இந்த சீர்திருத்தத்துக்கு உள்ளது என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
வர்த்தகக் குழு உறுப்பினர் பிரவீன் சாஹு கூறுகையில், “80% பொருட்கள் 5% ஜிஎஸ்டி அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன. இது மக்களின் வாங்கும் திறனை உயர்த்தும், நுகர்வை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளார். அதேபோல், பொருளாதார நிபுணர் ராஜீவ் சாஹு, “2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகமானதிலிருந்து இதுவரை நடந்த மிகப்பெரிய சீர்திருத்தம் இது. பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்” எனக் கூறினார்.
ஆதித்யா மேனியா ஜெயின், “அன்றாடப் பயன்பாட்டு பொருட்களுக்கான வரி குறைப்பு முதலீட்டாளர்கள், வணிகர்கள், நுகர்வோர் அனைவருக்கும் நிவாரணமாக இருக்கும்” என மதிப்பிட்டார்.
மேலும், பொருளாதார நிபுணர் அஜய் ரோட்டி, “சுகாதாரக் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி பூஜ்ஜியமாக்கப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் உதவியாக இருக்கும்” என பாராட்டினார்.
இந்த சீர்திருத்தம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.