சென்னை: மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் செப்டம்பர் 22 முதல் இரண்டு வரி விகிதங்களை மட்டுமே அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இனி 5% மற்றும் 18% என்ற இரு விகிதங்களே முக்கியமானதாக இருக்கும். இதன் விளைவாக பல கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களின் விலைகள் குறைய உள்ளன.
சில பொருட்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும். இதில் பான் மசாலா, சிகரெட், சர்க்கரை பானங்கள், கார்பனேட்டட் பானங்கள் அடங்கும். நடுத்தர வர்க்க மக்கள் பயன்படுத்தும் தொலைக்காட்சி, ஏசி, 350 சிசி-க்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் போன்றவை 18% வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

1,200 சிசி-க்கு குறைவான பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள், 4,000 மிமீ நீளம் கொண்டவை மற்றும் 1,500 சிசி-க்கு குறைவான டீசல் வாகனங்கள் 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், 1,200 சிசி-க்கு மேற்பட்ட பெட்ரோல் கார்கள் மற்றும் 1,500 சிசி-க்கு மேற்பட்ட டீசல் கார்கள், அதேபோல் 350 சிசி-க்கு மேற்பட்ட பைக்குகள், படகுகள், தனியார் விமானங்கள் ஆகியவற்றுக்கு 40% வரி விதிக்கப்படும்.
மின்சார வாகனங்களுக்கு (EV) தற்போதைய 5% வரி தொடர்ந்து அமலில் இருக்கும். எனினும் ரூ.40 லட்சத்துக்கு மேல் விலையுள்ள ஆடம்பர மின்சார கார்களுக்கு 18% முதல் 28% வரை உயர்ந்த ஜிஎஸ்டி விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது டெஸ்லா, BYD போன்ற நிறுவனங்களுக்கு பாதிப்பாக அமையக்கூடும். மேலும் சிமெண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால், கட்டுமானத் துறையிலும் சாதகமான மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.