பொள்ளாச்சியில் நடைபெறும் மாட்டுச் சந்தை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தையாகும். இது 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையைக் கொண்டது. ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னரே மன்னர் காலத்தில் இருந்து இந்த சந்தை இயங்கி வந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த காலத்தில் இங்கு யானைகள் மற்றும் குதிரைகளும் விற்கப்பட்டதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.

தற்போது இந்த சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் மட்டும் நடைபெறுகிறது. ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களுடன் சேர்த்து தமிழ்நாட்டின் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நெய்வேலி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கேரள எல்லைக்குப் பக்கமாக இருப்பதால், கேரள வியாபாரிகளும் இச்சந்தையில் அதிகமாக பங்கேற்கின்றனர்.
இந்த சந்தையில் முக்கியமாக வளர்ப்பு மாடுகளே விற்கப்படுகின்றன. விவசாயிகள் கரவை, சிந்து, கிர் போன்ற இன மாடுகளை வாங்கி பயனடைகிறார்கள். ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளுக்காக காளைகள் அதிகமாக விற்பனையாகின்றன. கரவை மாடுகள் ₹50,000 முதல் ₹60,000 வரை, வளர்ப்பு காளைகள் ₹60,000 முதல் ₹70,000 வரை, ரேஸ் காளைகள் ₹1 லட்சம் முதல் ₹1.5 லட்சம் வரை விலைபோக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. எருமைகள் ₹50,000 முதல் ₹60,000 வரை, போத்துக் கன்றுகள் ₹15,000 முதல் ₹20,000 வரை விற்பனையாகின்றன.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை 2,000 முதல் 3,000 மாடுகளும், வியாழக்கிழமை 500 முதல் 1,000 மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன. வியாபாரிகளுக்கான தங்குமிடம், மாடுகளுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் இச்சந்தை ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் மாட்டுச் சந்தைகளில் இன்றளவும் மிகப் பெரிய பரிமாற்றம் நடைபெறும் இடமாக பொள்ளாச்சி மாட்டுச் சந்தை திகழ்கிறது.