இன்கம் டாக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்யும் நேரம் வந்துவிட்டதால், 2024–25 நிதியாண்டிற்கான தயாரிப்பில் வரி செலுத்துவோர் இறங்கியுள்ளனர். சிலர் தாங்களாகவே ITR தாக்கல் செய்கிறார்கள், மற்றவர்கள் நிதி ஆலோசகர்களின் உதவியை நாடுகின்றனர். அதிகபட்ச வரிச்சலுகைகளை பெற பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியம்.

பழைய வரி விதிப்பு முறையில் அதிகமான விலக்குகள் உள்ளன. புதிய முறையில் சலுகைகள் குறைவாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒருவரின் ஆண்டு வருமானம் ₹18,20,000 என்றால், பழைய முறையை சரியாக பயன்படுத்தி, 0 வரியைச் செலுத்தும் வாய்ப்பு இருக்கிறது. முதலில், ₹5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு பழைய முறையில் வரி இல்லை என்பதை அறிவது முக்கியம்.
பிரிவு 80C-ன் கீழ் ₹1.5 லட்சம் வரை EPF, PPF, ELSS, NSC முதலியவற்றில் முதலீடு செய்தால் கழித்தலுக்கு தகுதியானது. பிறகு, 80D-ன் கீழ் தனிநபருக்கு ₹25,000 மற்றும் வயதான பெற்றோருக்கு ₹50,000 வரை மருத்துவ காப்பீட்டுக் கழித்தல் பெறலாம். வீட்டுக் கடனின் வட்டிக்கு ₹2 லட்சம் வரை பிரிவு 24B-ன் கீழ் விலக்கு கிடைக்கும்.
பிரிவு 80E-ன் கீழ் கல்விக் கடனுக்கான வட்டியும் கழிக்கலாம். நிலையான கழித்தலாக ₹50,000 கிடைக்கும். NPS பங்களிப்புக்காக 80CCD (1B) மற்றும் நிறுவன பங்களிப்பு வழியாக ₹1.58 லட்சம் வரை விலக்குகள் பெறலாம். வீட்டுவாடகை உதவித்தொகைக்கான (HRA) விலக்காக ₹4.80 லட்சம் வரை கிடைக்கலாம்.
பிரிவு 80G-ன் கீழ் ₹40,000 வரை நன்கொடைகளுக்கு விலக்கு கோரலாம். மேலும், நெகிழ்வான ஊதியம் (Flexi pay) — LTA, உணவுக்கூப்பன், புத்தகச் செலவுகள் போன்றவை ரூ.1.24 லட்சம் வரை கழிக்கப்படலாம். இந்த அனைத்தையும் கழித்த பிறகு, வரிக்கு உட்பட்ட வருமானம் ₹4,52,200 ஆகக் குறைகிறது. இது ₹5 லட்சம் க்கு குறைவாக இருப்பதால், எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.
இது போன்ற திட்டமிட்ட வரி திட்டமிடலால், அதிக வருமானம் இருந்தாலும் வரியைத் தவிர்க்க முடியும்.