புதுடெல்லி: முதல் முறையாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது பெரிய 5ஜி மொபைல் சந்தையாக மாறியுள்ளது. இதுகுறித்து, கவுண்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
முதல் முறையாக, 5ஜி மொபைல் சந்தையில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது அமெரிக்கா 3-வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
சீனா முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய 5G மொபைல் ஷிப்மென்ட் 20 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஆப்பிளின் 5G மொபைல் போன் முக்கிய பங்கு வகித்தது. மொத்த வளர்ச்சியில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை ஆப்பிள் மட்டுமே கொண்டுள்ளது.
ஆப்பிளின் இந்த வளர்ச்சி ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 தொடர்களால் சாத்தியமானது. பட்ஜெட் பிரிவில் 5G மொபைல் போன்களின் வருகை அதிகரித்திருப்பது சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உந்துகிறது.
குறிப்பாக, இந்த பிரிவில் Xiaomi, Vivo மற்றும் Samsung பிராண்டுகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மற்றும் எஸ்24 சீரிஸ் 21 சதவீத பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
2024 முதல் பாதியில் 5G மாடல்களுக்கான முதல் 10 பட்டியலில், ஆப்பிள் மற்றும் சாம்சங் மாடல்கள் தலா ஐந்து இடங்களைப் பிடித்தன.
ஆப்பிள் முதல் 4 இடங்களைப் பிடித்தது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியமும் 5G கைபேசி ஏற்றுமதியில் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.