மும்பை: விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்குப் பிறகு இன்று காலை இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கூர்மையான சரிவைக் கண்டன. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத கூடுதல் வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீதத்துடன் இந்த கூடுதல் 25 சதவீத வரி சேர்க்கப்பட்டதால், 50 சதவீத வரி இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதன் விளைவாக, தொழிலாளர் சார்ந்த துறைகளின் ஏற்றுமதி 70 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதிலிருந்து இந்திய பங்குச் சந்தை சரிவைக் கண்டது.

முந்தைய வர்த்தக நாளான கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று ஆரம்ப வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. காலை 9.30 மணி நிலவரப்படி, இது சுமார் 1 சதவீதம் குறைந்து 80,093.52 புள்ளிகளில் வர்த்தகமானது.
பிஎஸ்இயின் மொத்த சந்தை மூலதனம் ரூ.449 லட்சம் கோடியிலிருந்து ரூ.445 லட்சம் கோடியாகக் குறைந்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி இன்று அதிகாலை வர்த்தகத்தில் சுமார் 1 சதவீதம் சரிந்து 24,507.20 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க வரியின் தாக்கத்தால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.