சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து சாதனை படைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைவடைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். சேமிப்பின் அடையாளமாகக் கருதப்படும் தங்கம், கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்திருந்தாலும், சமீபத்திய விலை சரிவால் மக்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.

செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.10,220க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.81,760க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (செப்டம்பர் 15) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.10,210க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.81,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் விலையும் சரிவு கண்டுள்ளது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.8,455க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.67,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்த விலையால் தங்கம் வாங்க சிரமப்பட்டு வந்த சாமானிய மக்களுக்கு, இந்த குறைவு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.143க்கும், ஒரு கிலோ ரூ.1,43,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலை குறைவால் திருமண காலத்தை முன்னிட்டு நகை பிரியர்கள் தங்கள் கொள்முதலை திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.