இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் மிகப்பெரிய பணக்காரர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை, வை வை நூடுல்ஸ் நிறுவனருமான பினோத் சவுத்ரி. சவுத்ரி குழுமத்தின் தலைவராக இருக்கும் அவர், தற்போது 2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.15,000 கோடி மேல்) நிகர மதிப்புடன் நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரராகவும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 1763-வது இடத்திலும் உள்ளார்.

காத்மாண்டுவில் தொழில்முனைவோர் குடும்பத்தில் பிறந்த பினோத் சவுத்ரி, தனது குடும்ப பாரம்பரியமான ஜவுளித் தொழிலை விரிவுபடுத்தி, வணிகத்தில் பல்வேறு துறைகளில் தடம் பதித்தார். தாய்லாந்தில் பயணத்தின் போது நூடுல்ஸ் பற்றிய யோசனையை கண்டறிந்த அவர், அதை வை வை நூடுல்ஸ் மூலம் சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றார். இப்போது, அந்த பிராண்ட் உலகளவில் மேகி, இப்பி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக திகழ்கிறது.
நூடுல்ஸ் மட்டுமல்லாது, பேங்கிங், ஹாஸ்பிடாலிட்டி, ரியல் எஸ்டேட் போன்ற பல துறைகளிலும் பினோத் சவுத்ரி தனது வணிகங்களை விரிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, இந்தியாவின் தாஜ் ஹோட்டல்களுடன் இணைந்து 143 ஆடம்பர சொத்துக்களை நிர்வகித்து வருகிறார். துபாயிலும் ஹோட்டல்கள் தொடங்கி, உலகளாவிய அளவில் வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
சமூக நலனிலும் அவர் பங்காற்றி வருகிறார். 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள், பள்ளிகள் கட்டவும், அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் பெரும் நிதி உதவி செய்தார். தொழில்முனைவோர் மட்டுமல்ல, சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் கொடையாளராகவும் பினோத் சவுத்ரி நேபாளத்தில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.