புதுடில்லியில் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளதாவது, யு.பி.எஸ். எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க வரும் செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த திட்டத்தை அரசு ஊழியர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும் என்றும், கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல், மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிய விருப்ப முறையாக யு.பி.எஸ். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், முன்பிருந்த தேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்.) இருந்தவர்கள் விரும்பினால் யு.பி.எஸ்.க்கு மாறலாம். எனினும், இந்த வாய்ப்பு காலக்கெடு முடிந்த பிறகு கிடைக்காது எனவும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தகுதி வாய்ந்த ஊழியர்கள் மற்றும் என்.பி.எஸ். திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்கள் கூட, யு.பி.எஸ். திட்டத்தை தேர்வு செய்யலாம். ஆனால் அதற்கான இறுதி நாள் விரைவில் முடிவடைய இருப்பதால், கடைசி நேர சிரமங்களைத் தவிர்க்க முன்பே தங்கள் விருப்பத்தை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, கிட்டத்தட்ட 31,555 மத்திய அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தை ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யவும் இந்த யு.பி.எஸ். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற நாட்களில் மேலும் பலர் இந்த திட்டத்தில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.