இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான சிலாவில் (SILA) குறிப்பிடத்தக்க முதலீட்டைச் செய்துள்ளார். மார்ச் 4ஆம் தேதி இந்த முதலீட்டை உறுதிப்படுத்திய பிறகு, எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டு விட்டது என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், தோனியின் இந்த முதலீடு நிறுவத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

SILA நிறுவனம், ருஷாப் மற்றும் சாஹில் வோரா சகோதரர்களால் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் விரைவாக வளர்ந்து வருகிறது. அது இந்தியாவின் 125 நகரங்களில் 200 மில்லியன் சதுர அடிக்கு மேல் ரியல் எஸ்டேட் சொத்துகளை நிர்வகிக்கின்றது. மேலும், ரூ.16,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை உலகளாவிய முதலீட்டாளர்களுக்காக எளிதாக்கியுள்ளது.
SILA நிறுவனத்தின் சேவைகள், ரியல் எஸ்டேட் வசதிகளை நிர்வகிப்பது, ஆலோசனைகள் வழங்குதல் போன்றவற்றை உள்ளடக்கியவை. தோனியின் இந்த முதலீடு நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் நெட்வொர்க்கை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
தோனியின் குடும்ப அலுவலகம் இந்த முதலீட்டை உறுதிப்படுத்தி, SILA நிறுவனத்தின் பயணத்தை பாராட்டியுள்ளது. “தோனியின் ஆதரவு எங்களுக்கு விலைமதிப்பற்றது. அவரது தொழில்முனைவோராகவும் தலைமைப் பண்புகளில் இருந்து கற்றுக்கொள்ள முடியும்,” என்று SILA நிறுவனர் சாஹில் வோரா கூறியுள்ளார். ருஷாப் வோரா, தோனியின் ஆதரவு தங்களது இலக்குக்கு வலுசேர்க்கும் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், தோனியின் கடந்தகால சவால்கள் மற்றும் அம்ரபாலி குழுமத்துடன் இருந்த சர்ச்சையும் குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டில், அம்ரபாலி நிறுவனத்திற்கு அவர் ரூ.16 கோடி ஒப்பந்தம் வழங்கினார். ஆனால், அம்ரபாலி தனது பங்களிப்பை செலுத்தத் தவறியதால் அந்த ஒப்பந்தம் சரிவர நடக்கவில்லை. அதன்பிறகு, 2019ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அம்ரபாலியின் உரிமத்தை நிறுத்தி வைத்தது.
இவற்றுக்கு மத்தியில், தோனியின் இந்த புதிய முதலீடு அவரது தொழிலில் புதிய ஒரு அத்தியாயத்தை தொடங்குவதாக கருதப்படுகிறது.