புதுடில்லி: உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு (PLI) திட்டத்தின் கீழ், ஜவுளித் துறை நிறுவனங்கள் புதிதாக விண்ணப்பிக்க புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய ஐவுளித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த வாய்ப்பு விரைவில் முடிவடையவுள்ளதாகவும், ஆர்வமுள்ள நிறுவனங்கள் அவசியம் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேன் மேடு பைபர் (MMF) ஆடை மற்றும் பைப்ரிக் பிரிவுகளும், தொழில்நுட்ப ஜவுளித் தயாரிப்பு பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நிறுவனங்கள், வரும் 31ம் தேதி வரை அதிகாரப்பூர்வ போர்ட்டல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே வெளியான விதிமுறைகள் அனைத்தும், புதிய விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு, ஜவுளித் துறையில் தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் அமையும்.
நிறுவனங்கள், இந்த வாய்ப்பை தவறவிடாமல், சரியான ஆவணங்களுடன் நேரத்தில் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. புதிய நிறுவனங்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த பின்னரே, இந்த போர்ட்டல் மீண்டும் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.