வாஷிங்டன்: அதானி குழுமம் உட்பட ஏழு பெருநிறுவனங்கள் குறித்து சர்ச்சையை கிளப்பி, உலகின் கவனத்தை ஈர்த்த, ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம், கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், நேற்றுடன் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் தெரிவித்தார். 2017ம் ஆண்டு துவங்கப்பட்டு, 10 ஊழியர்களுடன் செயல்பட்ட இந்நிறுவனம், பல்வேறு நிறுவனங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு பெயர் பெற்றது. “எந்த யோசனைகளின் கீழ் பணியாற்றி வந்தோமோ, அந்த பணிகள் முடிக்கப்பட்டு விட்டதால், எங்கள் செயல்பாட்டை நிறுத்திவிட முடிவெடுத்தோம்,” என ஆண்டர்சன் தெரிவித்தார்.
கடைசியாக பொன்சி எனப்படும் பிரமிடு வகை நிறுவன முறைகேடுகள் குறித்த தகவல்களை, கண்காணிப்பு அமைப்பிடம் தெரிவித்ததுடன் பணி நிறைவு பெற்றதாக அவர் கூறினார். தங்கள் நிறுவனத்தின் ஏழு ஆண்டுகால பணிகள் வாயிலாக, 100க்கும் மேற்பட்டோர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை கண்காணிப்பு அமைப்புகள் தொடர்ந்ததாக கூறிய ஆண்டர்சன், அவர்களில் பலர் பெரும் பணக்காரர்கள் என்றார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்: என்ன காரணம்?
- வெறும் 10 ஊழியர்களை கொண்டு, புகார்கள் வாயிலாக பல பில்லியன் டாலர் இழப்பை கம்பெனிகளுக்கு ஏற்படுத்தியது
- இந்நிறுவனத்துக்கு, 1937ல் நியூ ஜெர்சிக்குள் பறந்த ஜெர்மனி போர் விமானம் ஹிண்டன்பர்க் நினைவாக பெயரிடப்பட்டது
- கடந்த 2020ல் மின்சார சரக்கு வாகன நிறுவனமான நிகோலா மீது குற்றம் சுமத்தியதில், ஹிண்டன்பர்க் பிரபலமானது
அதானி பங்குகள் விலை உயர்வு
கடந்த 2023ம் ஆண்டில் ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தை குறிவைத்தது. ஒப்பந்தங்களை முறைகேடாக பெற்றதாக, தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகளும் பெரிதாக்கியதால், அதானி குழும சந்தை மதிப்பு பெரும் வீழ்ச்சி கண்டது. பலமுனை தாக்குதல்களையும் தொடர்ந்து மறுத்த அதானி குழுமம், மீண்டும் முன்பிருந்ததைவிட சந்தை மதிப்பை உயர்த்திக் கொண்டது. ஹிண்டன்பர்க் கலைக்கப்படும் என்ற தகவலால், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் அளவுக்கு நேற்று உயர்வு கண்டன.