பீகார் மாநில கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு புதிய கூட்டுறவு நிதி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். “பீகார் ராஜ்ய ஜீவிகா நிதி சாக் சஹகாரி சங்க் லிமிடெட்” என்ற பெயரில் அறிமுகமான இந்த அமைப்பு, பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் லட்சக்கணக்கான “ஜீவிகா சகோதரிகள்” உடன் உரையாடிய மோடி, வலுவான பெண்கள் தான் இந்திய வளர்ச்சியின் முக்கிய அடித்தளம் எனக் கூறினார்.

இந்த அமைப்பு, அதிக வட்டி வசூலிக்கும் சிறு நிதி நிறுவனங்களின் பிடியில் இருந்து பெண்களை விடுவிக்க உதவும். மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நிதியளிக்கும் இந்த திட்டம் முழுமையாக டிஜிட்டல் முறையில் இயங்கும். சுமார் 12,000 சமூக ஆர்வலர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்கள் மொபைல் வழியே நேரடியாக நிதி சேவைகளைப் பெற முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் கடன்கள் வழங்கப்படுவதே இதன் சிறப்பு.
பிரதமர், ஸ்வச் பாரத், ஆயுஷ்மான் பாரத், ஹர் கர் ஜல், ஆவாஸ் யோஜனா போன்ற பெண்கள் மையப்படுத்திய முந்தைய திட்டங்களை எடுத்துக்காட்டினார். “ஜீவிகா நிதி” என்பது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; இது பெண்களின் கௌரவம் மற்றும் சுயமரியாதையையும் உறுதிசெய்யும் ஒரு முன்னெடுப்பு என அவர் வலியுறுத்தினார். பீகாரின் தாய் சக்தியை மதிக்கும் பண்பாட்டை நினைவு கூர்ந்து, பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும், ‘ஹர் கர் ஸ்வதேசி’ இயக்கத்தில் பங்கெடுக்கவும் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்த திட்டத்தின் மூலம் பீகார் மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் பெண் தொழில்முனைவோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் வலுவடைந்து, பெண்களுக்கு மலிவான, சரியான நேரத்தில் கிடைக்கும் நிதி ஆதரவு, அவர்களின் பொருளாதார தன்னிறைவை மேம்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.