மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் கடனளிப்பு துறையில் புதிய புரட்சிக்கான படிக்கட்டாக Unified Lending Interface (ULI) திட்டத்தை அறிவித்துள்ளார். இது, தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் UPI அமைப்பைப் போலவே, கடனளிப்பு செயல்முறையை எளிமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. ULI, வங்கிகள், நிதி நிறுவனங்கள், பயனர்கள் ஆகிய அனைவர் இடையேயும் ஒருங்கிணைந்த தளமாக இருக்கும்.

ULI தளம் செயல்படுவதால், கடன் விண்ணப்பம், ஆவண பரிசோதனை, ஒப்புதல் மற்றும் தொகை செலுத்தல் ஆகியவை அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும். இதில் பேப்பர் வொர்க் குறைக்கப்படும், விரைவான ஒப்புதல் வழங்கப்படும் மற்றும் செலவுகள் குறைக்கப்படும். இதனால் கிராமப்புற மக்களுக்கு சுலபமான கடன் வசதி கிடைக்கும். MSME நிறுவனங்கள், விவசாயிகள், சுய உதவி குழுக்கள் போன்றவற்றுக்கு இத்தகைய டிஜிட்டல் கடன் நடைமுறைகள் பெரிய பயனளிக்கவுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
ULI தளத்தின் முக்கிய அம்சங்களில் பைஜிட்டல் நிதி முறை குறிப்பிடத்தக்கது. இது பிசிக்கல் மற்றும் டிஜிட்டல் சேனல்களின் ஒருங்கிணைப்பு. மொபைல் செயலிகள், ஆன்லைன் தளங்கள், வங்கி கிளைகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பயனாளிகள் கடனை விண்ணப்பித்து, கணக்கு மேலாண்மை செய்ய முடியும். நகரங்களிலோ, கிராமங்களிலோ இருந்தாலும் ஒரே மாதிரியான சேவைகளை பெற முடியும்.
இத்திட்டம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய கட்டுமானமாக கருதப்படுகிறது. பின்டெக் நிறுவனங்கள் கிராமப்புறங்களை புதிய சந்தையாக பார்க்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். கிராமங்களில் அதிகரிக்கும் வருமானம், நுகர்வோர் தேவைகள், தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை பின்டெக் துறையும் பின்பற்ற வேண்டிய காலம் இது.
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நிதி சூழ்நிலையில், ULI திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும். இது நிதி அடையாளங்கள் இல்லாதவர்களுக்கும் கடன்களை எளிதில் கிடைக்கச் செய்யும் வகையில் செயல்படும். UPI போலவே, இந்தியா முழுவதும் விரிவடைந்த புதிய நிதி தேவை ULI மூலம் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.