சீனாவின் யுனான் மாகாணத்தில் வௌவால்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இதுவரை அறியப்படாத 20 புதிய வைரஸ்களின் இருப்பை வெளிச்சமிட்டுள்ளது. அவற்றில் இரண்டு வைரஸ்கள், மனிதனுக்கு கடுமையான மூளை வீக்கம் மற்றும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய நிபா மற்றும் ஹென்ட்ரா வைரஸ்களுடன் 71% ஒற்றுமை கொண்டுள்ளன. இது, மருத்துவ வல்லுநர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த வைரஸ்கள் வௌவால்களின் சிறுநீரகங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே மிகுந்த அச்சத்தை உருவாக்குகிறது.

2017 முதல் 2021 வரையிலான காலத்தில் 142 வௌவால்களில் இருந்து எடுக்கப்பட்ட திசு மாதிரிகள் மூலமாக, ஹெனிபா வகையைச் சேர்ந்த வைரஸ்கள் முதல் முறையாக இந்த அளவுக்கு தெளிவாக அறியப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் பொதுவாக விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குத் தாவும் ஆற்றலை கொண்டவை. மலேசியா, வங்கதேசம், ஆஸ்திரேலியாவில் இந்த வகை வைரஸ்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய வரலாறு உள்ளதால், சீனாவில் இவை தோன்றியிருப்பது ஒரு எச்சரிக்கை எனவே கருதப்படுகிறது.
தற்போது இந்த வைரஸ்கள் எந்த மனித நோயையும் தாக்கவில்லை என்றாலும், வௌவால்கள் பழத்தோட்டங்களுக்கு அருகில் வசிப்பதும், அவற்றின் சிறுநீர் மனிதன் பயன்படுத்தும் நீர் மற்றும் உணவுகளுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக கலப்பதற்கான வாய்ப்பு இருப்பதும், நோய் பரவலுக்கான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதன்படி, மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான தொடர்புகள் சில நேரங்களில் பெரும் சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது இதன் மூலம் மீண்டும் விளங்குகிறது.
மனிதர்களுக்குப் புதிய தொற்று எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இந்த கண்டுபிடிப்பு ஒரு முன்னெச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. பொதுச் சுகாதார அமைப்புகள், அறிவியல் உலகம், மற்றும் நோய் தடுப்பு மையங்கள் இந்த தகவலை தீவிரமாக கவனத்தில் எடுத்துள்ளன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு தயாராக இருக்கவும், நோய்கள் உருவாவதற்கு முன் தடுப்பதற்கும் இந்தவகை ஆய்வுகள் முக்கிய பங்காற்றுகின்றன.