ஐந்து நாட்கள் ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தைகள், வார இறுதியில் சற்று சரிவுடன் முடிவடைந்தன. தொடர்ந்து மூன்றாவது வாரமாக நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
நேற்று, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. 11வது முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்ததால், சந்தையில் சரிவு ஏற்பட்டது. இந்த சரிவுக்குப் பிறகு, சந்தை குறியீடுகள் மீண்டும் ஊசலாடி, இறுதியாக சிறிது சரிவுடன் முடிந்தது.
நிஃப்டி குறியீட்டில், நுகர்வோர் பொருட்கள் தவிர, அனைத்து துறை பங்குகளும் உயர்ந்தன. ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகபட்சமாக, 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன. மேலும், உலோகம், மீடியா மற்றும் ஐடி துறைகளின் பங்குகள் 4 சதவீதம் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 2,399 நிறுவனப் பங்குகள் உயர்ந்தன, 1,590 நிறுவனப் பங்குகள் சரிந்தன, 99 நிறுவனப் பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமாகின.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,830 கோடிக்கு மேல் பங்குகளை விற்பனை செய்தனர்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.46 சதவீதம் குறைந்து 71.76 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் அதிகரித்து 84.66 டாலராக இருந்தது.
முதல் 5 நிஃப்டி 50 பங்குகளில், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, பிபிசிஎல் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அதானி போர்ட்ஸ், சிப்லா, பார்தி ஏர்டெல், ஹெச்டிபிசி லைஃப் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை அதிக நஷ்டமடைந்தன.