இந்திய தபால் துறை 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பதிவு அஞ்சல் சேவையை 2025, செப்டம்பர் 1 முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. நம்பகத்தன்மையும், நீண்ட கால வரலாறும் கொண்ட இந்த சேவை, அரசுத் துறைகள் மற்றும் நீதிமன்றங்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு இது ஒரு பத்திரமான தகவல் பரிமாற்ற சேவையாக இருந்தது.

சமீப வருடங்களில் பதிவு அஞ்சலின் பயன்பாடு தொடர்ந்து குறைந்துவருவதால், இது போன்ற சேவைகளை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2011-12ம் ஆண்டில் 244.4 மில்லியன் பதிவு அஞ்சல்கள் அனுப்பப்பட்ட நிலையில், 2019-20ல் அது 184.6 மில்லியனாக குறைந்துள்ளது. இதன் பின்னணியில் தனியார் குரியர் மற்றும் இ-காமர்ஸ் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பதிவு அஞ்சலின் முக்கிய அம்சங்களான பாதுகாப்பான கையாளுதல், டெலிவரி நிரூபணம் மற்றும் கண்காணிப்பு வசதிகள் இப்போது ஸ்பீடு போஸ்ட் சேவையோடு இணைக்கப்படும். ஆனால் விலை வேறுபாடு காரணமாக இதை கிராமப்புற மக்கள் எளிதாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பதிவு அஞ்சல் ₹25.96ல் கிடைக்கும் போது, ஸ்பீடு போஸ்ட் ₹41-க்கு துவங்குகிறது.
இந்த மாற்றம் ஒரு புதிய யுகத்தைக் குறிக்கும் போது, பழைய நம்பிக்கைக்குரிய சேவையின் முடிவும் என்பதில் சந்தேகமில்லை. இது இந்திய தபால் துறையின் ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கும் முக்கியமான பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது.