புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்படும் என இக்ரா தெரிவித்துள்ளது.
இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு கடைசியாக ரூ. 2 கடந்த மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்ட போது 83 முதல் 84 டாலர் வரை இருந்தது.
இந்நிலையில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை பேரலுக்கு சராசரியாக 74 டாலராக குறைந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் விநியோக நிறுவனங்களின் மோட்டார் வாகன எரிபொருள் சில்லறை விற்பனையின் லாப அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தால், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைய வாய்ப்புள்ளதாக இக்ராவின் மூத்த துணைத் தலைவர் கிரிஷ் குமார் கதம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மார்ச் 15, 2024 அன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, எரிபொருட்களின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், எண்ணெய் விநியோக நிறுவனங்கள் பெட்ரோல் சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் ரூ.15 மற்றும் டீசல் சில்லறை விற்பனையில் ரூ.12 நிகர லாபம் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லாப வரம்பு அதிகரித்துள்ள நிலையில், மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, உள்நாட்டு சுத்திகரிப்பு திறன் 256.8 மில்லியன் டன்னாக உள்ளது.
அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் ஏற்றுமதி காரணமாக அடுத்த 3-4 ஆண்டுகளில் இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 306 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.