தற்போது வங்கிகளின் வட்டி விகிதங்களை விட தபால் நிலைய வைப்புத் திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளதால், முதலீட்டாளர்கள் பெரும்பாலானோர் தங்களுடைய பணத்தை தபால் நிலையங்களில் டெபாசிட் செய்ய ஆர்வமாக உள்ளனர். இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்த திட்டங்கள் குறைந்த ஆபத்து கொண்டதாகக் கருதப்படுகின்றன. அதனால்தான் பலருக்கு இது நம்பகமான முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தபால் நிலையம் தொடர்ந்து புதிய சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இருந்த RD, TD, MIS, SCSS, PPF, SSA, மற்றும் KVP போன்ற பல திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்துள்ளன. குறிப்பாக, TD எனப்படும் நேர வைப்புத் தொகை திட்டம், வங்கிகளின் FD திட்டத்திற்கே ஒத்ததாக இருக்கிறது. ஆனால் முக்கிய வேறுபாடு என்னவென்றால், தபால் நிலையம் FD திட்டத்தில் பொதுவாக வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகிறது.
1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கான திட்டங்களில் வட்டி விகிதம் 6.9% முதல் 7.5% வரை உள்ளது. இதில், 5 வருட திட்டம் 7.5% வட்டி வழங்குவதால் முதலீட்டாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. FD கணக்கு தொடங்க, ரூ.1,000 என்ற குறைந்தபட்ச தொகை போதுமானது. அதிகபட்ச வரம்பு ஏதுமில்லை என்பதால் பெரிய தொகைகள் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும் இது ஏற்றதாகும்.
முக்கியமாக, வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே அதிக வட்டி விகிதம் வழங்கப்படுவதால், மற்றோர் பிரிவினர் தவிர்க்கப்படுகிறார்கள். ஆனால் தபால் நிலைய திட்டங்களில் வயதெல்லையின்றி ஒரே வட்டி விகிதம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இளம் முதலீட்டாளர்கள், குடும்பங்கள் மற்றும் பெண்களும் இந்த திட்டங்களில் சமவாய்ப்பு பெற்றுள்ளனர்.