
நிலையான வருமானத்தை விரும்புபவர்களுக்கு இந்திய தபால் துறை வழங்கும் POMIS திட்டம் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. அரசாங்கம் ஆதரிக்கும் பாதுகாப்பான திட்டமாக இது காணப்படுகிறது. ஒரு மொத்தத் தொகையை ஒரே நேரத்தில் முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் வட்டி பெற முடியும். இதில் மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்றோர் மற்றும் இல்லத்தரசிகள் அதிகம் பயன்பெறும். 2025 ஜூலை–செப்டம்பர் காலக்கட்டத்திற்கு வருடாந்த வட்டி விகிதம் 7.4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் ஒரே நபராக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் ரூ.18 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த அளவில் முதலீடு செய்தால், வருடம் முழுவதும் ரூ.1,33,200 வருமானமாக வரும். இதன் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.11,100 பெற முடியும். கணக்கைத் திறக்க, அருகிலுள்ள தபால் நிலையத்தில் ஆதார், பான் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு செல்ல வேண்டும்.
முதலீடு ரொக்கம், காசோலை அல்லது ஆன்லைன் மூலமாக செய்யலாம். இது சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு உடன்படாமல், உறுதியான வருமானத்தை வழங்கும் திட்டமாகும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதன் பிறகு ரூ.100ன் மடங்குகளாக முதலீடு செய்யலாம். குழந்தைகளுக்காகவும் பெற்றோர் இந்தக் கணக்கை நிர்வகிக்கலாம். இது குறைந்த ஆபத்து கொண்ட, நீடித்த நிதி பாதுகாப்பு வழங்கும் திட்டமாக இருக்கிறது.