இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான முதலீடுகளை விரும்புகிறார்கள். அதில் முக்கியமானவை பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) மற்றும் ஃபிக்சட் டெபாசிட் (FD) ஆகும். அரசு ஆதரவு பெற்ற நீண்டகால சேமிப்பு திட்டமாக உள்ள PPF, ஓய்வுக்கால நிதி உருவாக்குவதற்கான சிறந்த வழி. மறுபுறம், வங்கிகள் வழங்கும் FDகள் குறுகிய மற்றும் நடுத்தர கால முதலீட்டுக்கு பொருத்தமானது. எனினும், இரண்டிலும் தனித்தன்மைகள் உள்ளதால் எது சிறந்தது என அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் உள்ளது.

PPF திட்டம் 15 ஆண்டுகள் லாக்கின் காலத்துடன் வருகிறது. 7ஆம் ஆண்டு முதல் பகுதி பணத்தை மட்டுமே எடுக்க முடியும். இதனால், நீண்டகால இலக்குகளுக்கு இது சிறந்தது. FDகளின் கால அளவு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும். அவசரத் தேவையின்போது சிறிய அபராதத்துடன் FDயை முன்கூட்டியே முடித்து விடலாம். இதனால், குறுகிய கால முதலீட்டில் பணத்தை திரும்ப பெற விரும்புவோருக்கு FD சுலபமான தேர்வாகும்.
வட்டி விகிதத்தைப் பொருத்தவரை, PPFக்கு தற்போது ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதன் வட்டி அரசால் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் நிர்ணயிக்கப்படுகிறது, மேலும் கூட்டு வட்டியுடன் கணக்கிடப்படுகிறது. FD வட்டி விகிதங்கள் வங்கி மற்றும் கால அளவைப் பொறுத்து மாறுபடும் — பொதுவாக 6% முதல் 7.5% வரை இருக்கும். ஆனால் FD வட்டிக்கு வரி விதிக்கப்படும் நிலையில், PPF வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகைக்கு வரி இல்லை என்பதும் இதன் முக்கிய நன்மையாகும்.
வரி சலுகையைப் பார்க்கும்போது, PPF “E-E-E” (Exempt-Exempt-Exempt) நிலையை கொண்டுள்ளது. அதாவது, முதலீடு செய்யும் தொகை, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் இறுதியில் கிடைக்கும் தொகை அனைத்தும் வரி விலக்காகும். இது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ் வருகிறது. FDவில் 5 ஆண்டு வரிச்சலுகை FDயைத் தவிர, மற்ற அனைத்து FD வட்டிகளும் வரிக்கு உட்பட்டவை. எனவே, நீண்டகால வரி சேமிப்பு மற்றும் பாதுகாப்பான ரிட்டன் வேண்டுமெனில் PPF சிறந்தது; அதேசமயம் குறுகியகால, உடனடி பணவசதி தேவைப்படுபவர்கள் FDயைத் தேர்வு செய்யலாம்.