மும்பை: ஒருங்கிணைந்த வங்கி குறைதீர்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட புகார்களில் 95.10 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது வங்கி சாரா நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் வங்கி சேவை குறைபாட்டை தீர்க்கவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் வங்கி குறைதீர்ப்புத் துறையிடம் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு மையம் 2,84,355 புகார்களைப் பெற்றுள்ளது. அவற்றில் 95.10 சதவீதம், 2,70,674 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புகார்களில், 88.77 சதவீத புகார்கள் ஆன்லைன் போர்டல், மின்னஞ்சல் மற்றும் மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு கண்காணிப்பு மையம் உட்பட டிஜிட்டல் வடிவத்தில் பெறப்பட்டுள்ளன. தனிநபர்களிடமிருந்து அதிகபட்சமாக 2,56,527 புகார்கள் பெறப்பட்டுள்ளன.