பணி ஓய்வு என்பது பொருளாதாரச் சவால்கள் முடிவடையும் கட்டமாக இல்லாமல், புதிய செலவுகளின் தொடக்கமாக மாறக்கூடும். மருத்துவ சேவைகள், வீட்டு பராமரிப்பு அல்லது உறவினர்களுக்கான உதவிகள் போன்றவை, பணியாற்றும் காலத்தை விட ஓய்வுபெற்ற வாழ்க்கையிலேயே அதிக செலவாக காணப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், வருமானம் குறைந்திருந்தாலும், சீனியர் சிட்டிசன்கள் கடன்களை பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன.
முதலில், வீட்டை அடமானமாக காட்டி கடன் பெறும் வழி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 60 வயதுக்கு மேல் சொந்த வீடு உள்ளவர்களுக்கு, ரிவர்ஸ் மோர்ட்கேஜ் என்ற வழிமூலம் வரி இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கைத் துணையாக அமையும். இதேபோல், பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்பிஐ போன்ற வங்கிகள் பென்ஷன் அடிப்படையில் குறைந்த வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்குகின்றன. இந்தக் கடன்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தக்கூடியதாக இருக்கும்.

மேலும், நகை அடமானம் வைத்து விரைவாக கடன் பெறுவது மற்றொரு எளிய வழியாகும். குறைந்த ஆவணங்கள் மற்றும் சில மணிநேரங்களிலேயே கடன் தொகை கிடைக்கக்கூடிய இந்த சேவை, பெரும்பாலான ஓய்வுபெற்றவர்களுக்கு உதவியாகிறது. அதேபோல், மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் எல்ஐசி பாலிசிகளை அடமானமாக காட்டி குறுகிய கால தேவைக்கேற்ப கடன் பெற முடியும். இந்த கடன்கள் குறைந்த வட்டி விகிதத்துடன் வழங்கப்படுவதால், செலவுகளை சமாளிக்க நம்பத்தகுந்த ஆதாரமாக அமைகின்றன.
கடந்த வருமானத்தை விட இப்போது அதிக நெருக்கடியில் இருக்கும் சீனியர் சிட்டிசன்கள், தங்கள் பிள்ளைகளுடன் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இளமையான துணை விண்ணப்பதாரர் இருப்பது, வங்கிகளுக்கு பாதுகாப்பான சந்தேகமற்ற விருப்பமாக உள்ளது. எனவே, ஓய்வுப்பெற்ற பிறகும் நிதி ஆதரவை பெறும் பல வழிகள் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.