அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரிகளை விதிக்கும் முடிவு உலகையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் தாக்கம் குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அமெரிக்காவின் இந்த முடிவு உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
பரஸ்பர வரிகள் தொடர்பான குழப்பம் சர்வதேச சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக இதன் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 931 புள்ளிகள் (-1.22%) சரிந்து 75,365 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346 புள்ளிகள் (-1.49) சரிந்து 22,904 புள்ளிகளில் நிலைத்தது.

முதலீட்டாளர்கள் லாபத்திற்காக முன்னணி நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவில் விற்றனர். இதன் விளைவாக, உலோகம், மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பார்மா 6.2 சதவீதம் வரை சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.9.47 லட்சம் கோடி குறைந்துள்ளது.
இதனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.403.86 லட்சம் கோடியாக சரிந்தது.