உலகளாவிய அரசியல் பதற்றமும் பொருளாதார மந்தநிலையும் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யா–உக்ரைன், இஸ்ரேல்–ஹமாஸ் போர், அதனுடன் அமெரிக்காவின் 50% வரி விதிப்பு போன்றவை இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 6 அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,005-க்கும், ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனையாகியது. அதே சமயம் வெள்ளி விலையும் உயர்வை பதிவு செய்தது.

கடந்த 24 மாதங்களில் தங்க விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. 2025ம் ஆண்டில் மட்டும் இது 36% அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது. நிபுணர்களின் கணிப்புப்படி, இதே போக்கில் விலை உயர்ந்து சென்றால், 2026ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1,25,000 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது. மத்திய வங்கிகளின் இருப்பில் அமெரிக்க டாலரின் பிடி படிப்படியாக பலவீனமடைந்துவருவதும் தங்க விலையை உயர்த்தும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க கருவூலச் சந்தையின் சுமார் $30 டிரில்லியன் மதிப்பிலிருந்து 1% கூட தங்கமாக மாறினால், தங்க விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $5,000 வரை உயரலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது. இது தற்போது நிலவும் அளவை விட 43% அதிகமாகும். இதனால் தங்கம் உலகளாவிய முதலீட்டு துறையில் இன்னும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என கூறப்படுகிறது.
இதேவேளை, உலக வர்த்தகப் போர் மீண்டும் வெடித்தால், அமெரிக்க டாலரின் நிலைமை மேலும் மோசமடையும். நாடுகள் படிப்படியாக டாலரிலிருந்து விலகி தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதத் தொடங்கும் சூழல் உருவாகும். இதன் விளைவாக, தங்கம் உலக பொருளாதாரத்தில் உச்சத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வரும் ஆண்டுகளை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.