அமெரிக்கா-சீனா வர்த்தகப் பதற்றம், உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவைகள் ஆகியவை சேர்ந்து தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலையை அதிகரித்துள்ளன. குறிப்பாக வெள்ளி கடந்த பத்து மாதங்களில் ரூ.89,300 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,79,000 என்ற சாதனை விலையை எட்டியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் வெள்ளியின் மீது பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.89,700 இருந்த வெள்ளி விலை இப்போது இரட்டிப்பாகியுள்ளது. இதனால் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் 99% வருமானம் பெற்றுள்ளனர். தங்கத்துடன் ஒப்பிடுகையில், வெள்ளியின் வருமானம் 37% அதிகம். லண்டன் சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறையுடன், சீனாவின் பொருளாதார மீட்சியும், தொழில்துறைகளில் வெள்ளிக்கான தேவையும் விலையை உயர்த்திய முக்கிய காரணங்களாகும்.
வெள்ளியின் பயன்பாட்டில் சுமார் 60% தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சோலார் பேனல், மின்னணு சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற துறைகளில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உலகளவில் நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் இது மேலும் 21% குறையும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்நிலையில் தீபாவளி காலத்தில் முதலீட்டாளர்கள் வெள்ளி வாங்க முன்வந்தாலும், நிபுணர்கள் இப்போதைக்கு கவனமாக இருக்க அறிவுறுத்துகின்றனர். ஃபெடரல் விகிதக் குறைப்பு மற்றும் அமெரிக்க வரி விதிப்பு மாற்றங்கள் காரணமாக குறுகிய காலத்தில் விலை ஏற்ற, இறக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நீண்டகால முதலீட்டாகவே வெள்ளியை பரிசீலிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
#