மும்பை: ஸ்விக்கியை தொடர்ந்து சொமாட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘குரூப் ஆர்டர்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும் பழக்கம் இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை ஒட்டி ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளையும் வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
இந்த வகையில், உணவு விநியோக நிறுவனங்கள் தற்போது கையிலெடுத்திருக்கும் புதிய அம்சம் ‘குரூப் ஆர்டர்’. அதாவது அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரியும் ஊழியர்களோ அல்லது நண்பர்களோ பொதுவான இணைப்பை உருவாக்கி உள்ளே சென்று தங்களுக்குத் தேவையான உணவை ‘கார்ட்டில்’ போன் மூலம் சேர்க்கலாம். இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக இதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
Swiggy சில நாட்களுக்கு முன்பு இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது இளைஞர்கள் மற்றும் IT ஊழியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பதிலடியாக சொமாட்டோவும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.